கறுப்பு ஜூலை தினத்தில் இலங்கை அரசாங்கம் வடக்கிற்கு அனுப்பிய விசேட ரயில் ஒரு ‘நாடகம்’

கறுப்பு ஜூலையின் 42ஆவது ஆண்டுகள் நிறைவடைகின்ற தினத்தில், தற்போதைய அரசாங்கத்தின் இளைஞர் பிரிவைச் சேர்ந்தவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வேடிக்கையான பயணத்தை மேற்கொண்டதை வடக்கிலுள்ள ஒரு தமிழ் கட்சி கடுமையாகக் கண்டித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் திருநெல்வேலியில் ஆரம்பித்து நாடு முழுவதும் அரச ஆதரவுடன் படுகொலை செய்யப்பட்ட 3,000ற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, வடக்கு மற்றும் கிழக்கிலும், கொழும்பு, பொரளையிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு நினைவேந்தல் நிகழ்வில் “போலி சகோதரத்துவ நாள் வேண்டாம்!” என்ற வாசகங்கள் கொண்ட பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டன.
‘ஒன்றாய் நாம் பறந்திடுவோம்!’ என்ற தொனிப்பொருளுடன் ‘சகோதரத்துவ தினம் 2025’ ற்காக “சகோதரத்துவ ரயிலில்” சோசலிச இளைஞர் சங்கத்தின் சகோதர சகோதரிகள் யாழ்ப்பாணத்திற்கு சென்றதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பயணத்தில் இணைந்த சோசலிச இளைஞர் சங்க உறுப்பினர்கள் சிங்களம் மற்றும் தமிழில் (கானா/பைலா) பாடல்களைப் பாடிக்கொண்டே பயணம் செய்யும் படங்கள் மற்றும் காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர்.
நேற்றைய தினம் (ஜூலை 23) யாழ்ப்பாணம் முனியப்பர் கோயில் அருகே நடைபெற்ற நினைவேந்தலுக்கு தலைமை தாங்கிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், அரசாங்கத்தின் இந்த ரயில் பயணத்தை கண்டித்ததோடு, தமிழ் இனப்படுகொலைக்கு நீதி கிடைக்க தமிழ் மக்கள் கோரும் சர்வதேச குற்றவியல் விசாரணையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்குடன் நட்புறவு என்ற பெயரில் வடக்கிற்கு கொண்டுவரப்பட்ட இனவாத செயலே, இதுவென சாட்டினார்.
”தேசிய மக்கள் சக்தி என்கின்ற இந்த இனவாதிகள் தமிழர்களுக்கு எதிரான படுகொலைகளை மூடிமறைத்து ஏதோ முன்பிருந்து ஆட்சியாளர்கள்தான் இனவாதிகள் அவர்கள் விட்ட பிழையால்தான் எல்லாம் நடந்தது. தாங்கள் வந்த பின்னர் தமிழர்கள் ஒன்றிணைந்து வாழத் தயாராகிவிட்டார்கள் என்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்தி, சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தி, சர்வதேச குற்றவியல் விசாரணை என்ற தமிழர்களின் கோரிக்கையை இல்லாமல் செய்வதற்கு முயற்சிக்கின்றார்கள். அந்த நோக்கத்தில் நட்புறவு பாலம் என்ற பெயரில் இனவாதிகள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றார்கள்.”
தற்போதைய ஜனாதிபதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது தமிழ் இனப்படுகொலையை எவ்வாறு ஆதரித்தார் என்பதை நினைவுகூர்ந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர், மக்களை ரயிலில் வடக்கிற்கு அழைத்து வந்து நாடகம் ஆடுவதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.
”அனுர குமார திசாநாயக்க ஒரு மோசமான இனவாதி, சந்திரிக்கா அரசாங்கத்தின் காலத்தில் தமிழர்களை அழிக்க அவர் முழுமையாக துணை நின்றவர். அதேபோன்று இந்த இன அழிப்பிற்கு ராஜபக்சவோடும் அவர் துணை நின்றவர். அந்த இனவாதி இன்று தேசிய மக்கள் சக்தி என்ற ஒரு போர்வையை போத்திக்கொண்டு. அந்த தேசிய மக்கள் சக்தி ஏதோ தமிழர்களுக்கு வாழ்வளிக்கப்போவதாக கூறிக்கொண்டு அங்கிருந்து ஆட்களைக் கொண்டுவந்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றார்கள்.”
இதேவேளை, வவுனியா நகரசபைக்கு அருகிலுள்ள பொங்கு தமிழ் நினைவுச்சின்னத்தின் முன்பாக, தமிழ் தேசிய பேரவை தலைமையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும், கறுப்பு ஜூலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி கொழும்பில் உள்ள பொரளை கனத்தை மயானத்திற்கு முன்பாகவும் நினைவேந்தல் நடைபெற்றது, இது “வடக்கு-தெற்கு சகோதரத்துவத்தால்” ஏற்பாடு செய்யப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றைய தினம் (ஜூலை 23) கறுப்பு ஜூலை படுகொலையை நினைவுகூர்ந்தனர். 1983ஆம் ஆண்டு பொரளை பேருந்து நிலையத்தில் ஒரு தமிழ் இளைஞரை நிர்வாணமாகவும் உயிருடனும் எரிக்கத் தயாராகும் சிங்களக் கும்பலைக் காட்டும் புகைப்படத்தின் முன் மலர்களை வைத்து நினைவேந்தலை நடத்தினர்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் எஸ். பாஸ்கரன் தலைமை வகிக்கும் காரைத்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள், 42 ஆண்டுகளுக்கு முன்பு அரச ஆதரவுடன் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களை நினைவுகூரும் வகையில் காரைத்தீவு கடற்கரையில் விளக்கேற்றி நினைவேந்தினர்.
23 ஜூலை 1983
ஜூலை 23, 1983 அன்று ஆரம்பித்து பல நாட்கள் நீடித்த, கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் இலங்கையின் இனப்படுகொலையில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதோடு கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான வீடுகள் மற்றும் சொத்துக்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள திருநெல்வேலியில், இலங்கை இராணுவப் படையினரால் படுகொலை ஆரம்பிக்கப்பட்டது.
யாழ். பலாலி வீதியில் பரமேஸ்வரா சந்திக்கும் திருநெல்வேலி சந்திக்கும் இடையில் வெடித்த கண்ணிவெடியில் வாகனத்தில் இருந்த 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட பின்னர், அன்று இரவும் மறுநாளும் கிராமங்களுக்குள் நுழைந்த துருப்புக்கள் பலாலி வீதியிலும் சிவன் அம்மன் கிராமத்திலும் 51 பேரைக் கொன்று வீடுகளை எரித்தனர்.
கொல்லப்பட்டவர்களில் ஆறு வயது சிறுவனும் பதினொரு வயது சிறுமியும் அடங்குவர் என மனித உரிமைகளுக்கான வடக்கு கிழக்கு அலுவலகம் (NESOHR) மற்றும் வடகிழக்கு புள்ளிவிபர மையம் ஆகியன ஆவணப்படுத்தியுள்ளன.
கண்ணிவெடிகளால் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அவர்களின் கிராமங்கள் மற்றும் ஊர்களுக்கு அனுப்பப்படுவதற்குப் பதிலாக பொரளை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அரசாங்கத்தின் கூட்டு அடக்கத்தில் பங்கேற்ற அரசாங்க ஆதரவு குண்டர்களால் நாடு முழுவதும் நடத்தப்பட்ட தமிழர்கள் மீதான படுகொலைகளுக்குப் பொறுப்பான எவரும் கடந்த 42 வருடங்களில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை.