மக்கள் 100 வயதை கடந்து வாழ்வதற்கான இரகசியம்! ஆய்வில் வெளியான தகவல்!
உலகில் ஒரு சில நாடுகளில் வாழும் மக்கள் நூறுவயதை கடந்து வாழ்வது பலருக்கும் வியப்பை அளித்திருக்கும். குறிப்பாக ஜப்பான் மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் வாழும் மக்கள் இலகுவாக நூறுவயதையும் கடந்து வாழ்ந்து வருகின்றனர்.
இது தொடர்பில் பல்வேறு ஆராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பொதுவாக ஒருவரின் உடல், உள ஆரோக்கியம் நீண்டகால உயிர்வாழ்க்கைக்கு முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சமீபத்தில் முன்னெடுக்கப்பட்ட ஒரு ஆய்வு மனிதன் நீண்டகாலம் வாழ்வதற்கு மரபணு மூலக்கூறுகளும் முக்கிய காரணமாக உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இத்தாலிய மக்கள் மற்றவர்களை விட நீண்ட காலம் வாழ்வது தொடர்பில் ஆய்வொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆய்வில் நூறு வயதை கடந்த 333 பேர் கலந்துகொண்டுள்ளனர்.
அவர்களின் மரபணு அமைப்பை 103 பண்டைய மரபணுக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்ததாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய மரபணுக்களுக்கும், தற்போது வாழும் மக்களின் மரபணுக்களுக்கும் பாரிய மாற்றங்கள் இருந்தபோதிலும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை இருவரிலும் காணப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய தற்போது இத்தாலியில் வாழும் மக்கள் மேற்கத்திய வேட்டைக்காரர்களுடன் வலுவான மரபணு தொடர்பைக் கொண்டிருப்பதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
உண்மையில் இவ்வகையான மரபணுக்களை பெற்றவர்கள் நூறு வயது வரை வாழ்வதற்கான சாத்தியப்பாட்டை 38 சதவீதம் அதிகரிப்பதாக இயற்பியல் கூறுகிறது.
இது உணவு முறையுடன் எவ்வித தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதையும் ஆய்வாளர்கள் புலப்படுத்தியுள்ளனர். மேலும் சில இத்தாலியர்கள் பனியுகத்தில் இருந்து வந்த மூதாதையர்களின் பரிணாம வளர்ச்சியை கொண்டிருப்பதாகவும் இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.






