வீடியோவால் வந்த வினை… மலேசியா பெண்ணிடம் இருந்து அழகு ராணி பட்டம் பறிப்பு!
மலேசிய அழகி விரு நிக்கா டெரின்ஷிப் தாய்லாந்தில் விடுமுறையை கழிப்பதற்காகச் சென்றபோது நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது முறையற்றது எனச் சொல்லி அவரது அழகி பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவைச் சேர்ந்தவர் விரு நிக்கா டெரின்ஷிப் (24). இவர் வருடா வருடம் நடைபெறும் ’Unduk Ngadau Johor’ அழகிப் போட்டியில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார். இந்த நிலையில், தாய்லாந்தில் விடுமுறைக்காக சென்றிருந்த டெரின்சிப், குறைந்த ஆடை அணிந்த ஆண் நடனக் கலைஞர்களுடன் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது. இது சர்ச்சைகளையும் கிளப்பியது.
இந்த வீடியோவில் அவரது நடத்தை ஒரு பொது ஆளுமைக்கு பொருத்தமற்றது என்று பட்டம் கொடுத்த கடசாண்டுசுன் கல்சுரல் அசோசியேஷன் (Kadazandusun Cultural Association) தலைவர் டான்ஸ்ரீ ஜோசப் பைரின் கிடிங்கன் தனது அதிருப்தியைத் தெரிவித்தார். மேலும், டெரின்சிப் பட்டத்தை திருப்பித் தர வேண்டும் என்று அவர்கள் அறிவிப்பதற்கு முன்பே, டெரின்சிப் தனது பட்டத்தை திருப்பி அளித்துள்ளார்.
இது குறித்து கிடிங்கன் கூறியிருப்பதாவது, “டெரின்சிப் சாதாரண ஒருவராக இருந்து இந்த வீடியோவை வெளியிட்டிருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால், அவரது இந்த வீடியோவை சிலர் நகைச்சுவையாகப் பார்க்கின்றனர். சிலர் புகார் தெரிவிக்கின்றனர். இதுபோன்ற தவறுகள் வருங்காலத்தில் நடக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவு. டெரின்சிப்பும் எங்கள் முடிவை ஏற்றுக் கொள்வார் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.
இதுபற்றி டெரின்சிப் கூறியதாவது, “என் சொந்த விருப்பதில்தான் இந்தப் போட்டியில் கலந்து கொண்டேன். இந்த பட்டத்தை திருப்பி அனுப்பும் எனது முடிவை நான் மதிக்கிறேன்” என்றார். மேலும், “இந்தப் பட்டம் ஒருவரின் முழுமையையோ வெற்றியையோ தீர்மானிப்பதில்லை. எல்லோருமே தவறு செய்பவர்கள்தான். நான் பர்ஃபெக்ட் கிடையாது.
இந்த வீடியோவுக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கொடுத்தவர்களுக்கு நன்றி. இதை விட்டுவிட்டு இனி வேறு விஷயங்கள் பற்றி பேசுவோம். மிக முக்கியமாக, எனது குடும்பத்தினரையும் நண்பர்களையும் இந்த விஷயத்தில் ஈடுபடுத்த வேண்டாம்” எனக் கூறியுள்ளார்.