இலங்கையில் காங்கிரீட் தூண் இடிந்து விழுந்து மாணவி உயிரிழந்த விவகாரம் குறித்து கல்வி அமைச்சர் விடுத்துள்ள பணிப்புரை!
வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 5 மாணவர்கள் காயமடைந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சு கல்வி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்து உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிராந்திய கல்வி அலுவலக அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி, குறித்த பாடசாலைக்குச் சென்று சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் (15.11) கைகளை கழுவிக் கொண்டிருந்த முதலாம் தரத்தைச் சேர்ந்த 06 மாணவர்கள் குறித்த பாடசாலையில் தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்கிரீட் சுவர் இடிந்து விழுந்ததில் காயமடைந்தனர்.
இதில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 05 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.