எட்டு மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வரின் உடல்
இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான அலோஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவிருந்தது.
இந்தோனேசியாவில் இந்த கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு 7, விஜேராம மாவத்தையில் வசிக்கும் கோடீஸ்வர வர்த்தகரின் சகோதரியான அனோஷி சுபசிங்க இந்த கொலை தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளார்.
நீர்கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சமன் சிகேராவின் பணிப்புரையின் பேரில் விமான நிலைய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பரிசோதகர் எல்மோ மல்கம் பேட் உள்ளிட்ட பொலிஸ் குழு இந்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.