Uber செயலியை பயன்படுத்தி 800 இந்தியர்களை அமெரிக்கா கொண்டு சேர்த்த நபர்..
அமெரிக்கா கலிபோர்னியாவில் வசிக்கும் இந்திய வம்சாவளி நபர் ரஜிந்தர் பால் சிங் என்ற ஜஸ்பால் கில் (49). இவர், கனடா நாட்டில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக சுமார் 800 இந்தியர்களை கொண்டுசென்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த செயலில் ஈடுபட்ட கும்பலில் முக்கிய நபராக விளங்கிய ஜஸ்பால் கில், அதன் மூலம் 5 லட்சம் அமெரிக்க டொலர்கள் வரை ஈட்டியதாக கூறப்படுகிறது. வாகன சவாரிக்கான uber செயலியை பயன்படுத்தி, இந்தியர்களை அமெரிக்காவுக்குள் இவர் வாகனங்களில் அழைத்துச்சென்றதும் தெரியவந்திருக்கிறது. சுமார் 4 ஆண்டுகாலமாக இது நடந்துவந்திருக்கிறது.
கலிபோர்னியாவில் உள்ள ஜஸ்பால் கில்லின் வீட்டில் சோதனையிட்ட விசாரணை அதிகாரிகள், அங்கிருந்து 45 ஆயிரம் டொலர் ரொக்கம், போலியான ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட ஜஸ்பால் கில், தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். இந்த வழக்கை விசாரித்த மாவட்ட கோர்ட்டு, ஜஸ்பால் கில்லுக்கு 45 மாதங்கள் சிறை தண்டனை விதித்து நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
ஜஸ்பால் கில்லும் அமெரிக்காவில் சட்டவிரோதமாகத்தான் வசித்து வந்துள்ளார். எனவே அவர் சிறை தண்டனைக்குப் பிறகு அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.