அரசின் ஆயுள் மக்கள் கைகளுக்குள்: கோட்டா ஆட்சியை உதாரணம் காட்டுகிறார் ராஜித!
“ஆட்சியைக் கவிழ்ப்பது மக்களின் பணி, அதனை நாம் செய்யமாட்டோம்.” – என்று முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன Rajitha Senaratne தெரிவித்தார்.
புத்தாண்டில் எதிரணியின் அரசியல் செயல்பாடு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ஆட்சியைக் கவிழ்க்க எம்மால் முடியாது. அதற்குரிய பணியை மக்கள்தான் முன்னெடுக்க வேண்டும்.
அரசாங்கத்தின் ஆயுள் காலம் ஐந்து எனக் கூறப்பட்டாலும் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை அதற்கு முன்னரே மக்கள் அனுப்பினார்கள்.
எனவே, அரசாங்கத்தின் ஆயுளென்பது மக்களின் கைகளிலேயே உள்ளது.
நாடு முன்னால் உள்ள சவால்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்கொண்டால் நல்லது. ஆனால் அதற்குரிய சாத்தியம் உள்ளதா என்பது சந்தேகமே.
அதேவேளை, வெனிசுலாமீதான அமெரிக்காவின் தாக்குதல் முழு உலகுக்கும் அச்சுறுத்தலாகும்.” – என்றார் ராஜித.





