பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை : சில ஊடகங்கள் தீக்கிரை!
பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை (Sheikh Hasina) பதவி நீக்கம் செய்ய வழிவகுத்த இளைஞர் இயக்கத்தின் முக்கியத் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி (Sharif Osman Hadi) மரணித்ததை தொடர்ந்து வன்முறை வெடித்துள்ளது.
டாக்காவில் உள்ள ஒரு மசூதியை விட்டு அவர் வெளியேறியபோது முகமூடி அணிந்த மர்ம நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சிங்கப்பூரில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்த செய்தி வெளியானதும், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் தலைநகரில் உள்ள ஒரு சதுக்கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், ஆர்ப்பாட்டக்காரர்கள் முக்கிய வங்கதேச செய்தித்தாள்களான தி டெய்லி ஸ்டார் ( The Daily Star) மற்றும் புரோத்தோம் அலி (Prothom Ali) ஆகிய அலுவலகங்களை சேதப்படுத்தினர், ஒரு கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நிலமையை கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு துருப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கட்டிடத்திற்குள் சிக்கிய பத்திரிகையாளர்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டதாகவும் பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் பங்களாதேஷ் அரசியல் கட்சிகள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த இடைக்கால அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன.
இடைக்கால அரசாங்கத்திற்குத் தலைமை தாங்கும் நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் (Muhammad Yunus) , ஹாடியின் மரணம் “தேசத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு” என்று கூறினார்.





