இஸ்ரேல் ராணுவ புலனாய்வு துறையின் தலைவர் திடீர் ராஜினாமா…
இஸ்ரேல் நாட்டின் ராணுவ புலனாய்வு துறையின் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா என்பவர் இன்று ராஜினாமா செய்திருக்கிறார்.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் ஆயுதக் குழுவினரின் அக்டோபர் 7 தாக்குதல் பின்னணியில், அந்நாட்டு ராணுவ புலனாய்வு இயக்குநகரத்தின் தலைவரான மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவா இன்று ராஜினாமா செய்திருக்கிறார். ஹமாஸ் தாக்குதல் தொடர்பான ராணுவ உளவுத்துறையின் தோல்விக்கு பொறுப்பேற்று அவர் ராஜினாமா செய்துள்ளார்.
இஸ்ரேல் வரலாற்றில் மிகவும் கொடூரமான தாக்குதலாக அடையாளம் காணப்பட்டிருக்கும், அக்.7 ஹமாஸ் குழுவின் ஊடுருவல் மற்றும் தாக்குதலை முன்னரே மோப்பமிட தவறியதில் ராணுவ புலனாய்வுத் துறையின் தோல்வி பெரிதும் விமர்சிக்கப்பட்டது. ஹமாஸ் தாக்குதலை அடுத்து அதற்கு எதிராக காசா மீதான இஸ்ரேல் பாதுகாப்பு படையினரின் பதிலடி நடவடிக்கைகள் அதன் நிறைவு கட்டத்தை எட்டி வருகின்றன.
அக்.7 தாக்குதலில் இஸ்ரேலில் 1200 பேர் கொல்லப்பட்டனர். அதன் பதிலடியில் காசாவின் அப்பாவி பொதுமக்கள் வரை சுமார் 34 ஆயிரத்துக்கும் மேற்ப்பட்டோர் கொல்லப்பட்டனர். நாட்டுக்கு வெளியேயான நடவடிக்கைகள் ஒருவாறாக முடிவுக்கு வருவதை அடுத்து, அக்.7 தாக்குதல் பின்னணியில் உள்நாட்டு நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடங்கியுள்ளது. அதன் முதல் நடவடிக்கையாக இஸ்ரேல் ராணுவ உளவு இயக்குநகரத்தின் தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.
“எனது கட்டளையின் கீழ் உள்ள புலனாய்வு இயக்குநரகம் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை நிறைவேற்றவில்லை. அந்த கருப்பு நாளை நான் என்னுடன் சுமந்து செல்கிறேன்; வலியை என்றென்றும் என்னுடன் சுமந்து செல்வேன், ”என்று ஹலிவா தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஹலிவாவின் பதவி விலகல் கோரிக்கையை ராணுவத் தளபதி ஏற்றுக்கொண்டதாகவும், அவரது சேவைக்கு நன்றி தெரிவிப்பதாகவும் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேஜர் ஜெனரல் அஹரோன் ஹலிவாவின் ராஜினாமா, ஹமாஸின் தாக்குதல் தொடர்பாக இஸ்ரேலின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகளிடம் மேலும் வீழ்ச்சி ஏற்படும் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் இஸ்ரேல் இன்னும் காசாவில் ஹமாஸுடன் போரிட்டு வருவதாலும், வடக்கில் லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லாவுடன் போரிட்டு வருவதாலும் ராஜினாமா குறித்தான அனுமானங்கள் இன்னமும் தெளிவாகவில்லை.
ஹலிவாவும் பிற உயரதிகாரிகளும் ஹமாஸ் தாக்குதலைத் தடுக்கத் தவறியதற்கான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டாலும், மற்றவர்கள் அதை நிறுத்திவிட்டனர். குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், காசா மீதான தாக்குதல் வேகத்தில் ஊடகங்கள் மற்றும் சர்வதேச சமூகத்தின் பார்வையில் அதனை மறக்கடிக்கச் செய்திருக்கிறார்.