ஹெலோவீன் அசம்பாவிதம்; முன்னாள் சியோல் காவல்துறைத் தலைவர் விடுதலை
தென்கொரியத் தலைநகர் சோலில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற ஹெலோவீன் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 159 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், அந்த அசம்பாவிதத்துக்குச் சோல் நகரின் முன்னாள் காவல்துறைத் தலைவர் காரணமல்ல என்று அக்டோபர் 17ஆம் திகதியன்று அந்நாட்டு நீதிமன்றம் கூறியது.அவர் அப்போது கவனக்குறைவுடன் நடந்துகொள்ளவில்லை என்றும் அவர் குற்றவாளி அல்ல என்றும் அது தீர்ப்பளித்தது.
இந்த அசம்பாவிதம் தொடர்பான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த ஆக உயர் அதிகாரியான கிம் குவாங் ஹோ விடுவிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாகக் குற்றம் சுமத்தப்பட்டிருந்த மற்றொரு காவல்துறை அதிகாரிக்குக் கடந்த செப்டம்பர் மாதம் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கிம்மைவிட குறைந்த பதவி வகித்த அந்த முன்னாள் அதிகாரி, அசம்பாவிதம் நிகழ்ந்த மாவட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெலோவீன் திருவிழாவுக்குத் தேவையான ஏற்பாடுகளை அவர் செய்யவில்லை என்றும் அதனால் பலர் உடல் நசுங்கி உயிரிழந்ததாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.