“நீதி மறுக்கப்படுகிறது”: சர்ச்சைக்குரிய நிறுவனங்களைத் தடை செய்ய பிரித்தானிய அரசுக்கு அழுத்தம்
பிரித்தானியாவின் கிரென்பெல் டவர் தீ விபத்தில் 72 பேர் உயிரிழக்கக் காரணமான நிறுவனங்களுக்கு, இப்போதும் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான அரச ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டு வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
2017-ஆம் ஆண்டு நடந்த இந்த கோர விபத்து குறித்து நடத்தப்பட்ட பொது விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்கள், தற்போதும் சுமார் 87 பொதுத்துறை ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குறிப்பாக, தீப்பிடிக்கக்கூடிய பாதுகாப்பு உறைகளை வழங்கிய மற்றும் கட்டுமானப் பணிகளில் கவனக்குறைவாகச் செயற்பட்ட நிறுவனங்களுக்கு சுகாதாரத் துறை (NHS) உள்ளிட்ட அரச துறைகளில் ஒப்பந்தங்கள் நீடிப்பதை நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ பவல் (Joe Powell) கடுமையாகச் சாடியுள்ளார். குற்றவியல் விசாரணைகள் ஒருபுறம் நடந்தாலும், தார்மீக அடிப்படையில் இந்த நிறுவனங்களைத் தடை செய்ய வேண்டும் எனப் பாதிக்கப்பட்டவர்களின் அமைப்பான ‘கிரென்பெல் யுனைடெட்’ வலியுறுத்தியுள்ளது.
இது குறித்துப் பிரித்தானிய அரசுக்கு அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்துத் தீவிர தணிக்கை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.





