ஜனநாயக விரோத செயலை செய்யும் அரசாங்கம் – மஹிந்த தேசப்பிரிய!
மாகாணசபைத் தேர்தலை நடத்தாமல் அதன் நிர்வாகத்தை ஆளுநர் ஊடாக முன்னெடுத்து வருவது ஜனநாயக விரோதச் செயலாகும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ மாகாணசபைத் தேர்தல் ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதியளிக்கப்பட்டதால், அதனை நடத்தாமல் ஆளுநர்கள் ஊடாக நிர்வாகத்தை முன்னெடுப்பது சட்டவிரோதமாகும்.
மக்கள் சபையை நிர்வகிக்க வேண்டுமெனில் மக்கள் வாக்களிப்புமூலம் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் அவசியம் என மாகாணசபைகள் தொடர்பான வழக்கு விசாரணையொன்றில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது” எனவும் மஹிந்த தேசப்பிரிய சுட்டிக்காட்டினார்.
தேர்தல் நடத்தப்படாமல் அது ஒத்திவைக்கப்பட்டுவருவது ஜனநாயக விரோதமாகும்.
ஆளுங்கட்சி தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் ஒரு வருடத்துக்குள் பழைய முறையிலேனும் மாகாணசபைத் தேர்தலை நடத்தி இருக்கலாம். அவ்வாறு செய்திருந்தால் பிரச்சினை எழுந்திருக்காது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்குள்ள தடையை நாடாளுமன்றத்தால் மாத்திரமே தற்போது நிவர்த்தி செய்ய முடியும். எந்த முறைமையின்கீழ் தேர்தல் என்ற முடிவுக்கு வரவேண்டும். பழைய முறைமையின்கீழ் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அடுத்த வருடம் முற்பகுதியில் அதனை செய்ய முடியும்.
மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு எதிரணி வசம் உள்ள உள்ளாட்சிசபைகளில்கூட இன்னும் தீர்மானம் நிறைவேற்றப்படாமல் உள்ளது.” எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.





