சிங்கப்பூரில் மோசடிகளை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள புதிய முயற்சி!
சிங்கப்பூரில் மோசடி மற்றும் ஊழல் எதிர்பிற்கான சாலை நிகழ்ச்சி இன்று (08.11) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு அரசு நிறுவனங்கள் மற்றும் சமூக கூட்டாளர்களை ஒன்றிணைத்து, மோசடிகள் குறித்த பொது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள் அல்லது செய்திகளைச் சரிபார்ப்பதன் மூலம், மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருக்க பொதுமக்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவ்வாறான மோசடியான அழைப்புகள் கிடைக்கப்பெற்றால் அதனை மற்றவர்களுக்கு தெரிவித்து அவர்களை விழிப்புடன் இருக்க செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய குற்றத் தடுப்பு கவுன்சில், தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம், சிங்கப்பூர் சைபர் பாதுகாப்பு நிறுவனம், மத்திய வருங்கால வைப்பு நிதி வாரியம் மற்றும் சிங்கப்பூரில் உள்ள வங்கிகள் சங்கம் ஆகியவை தனது சொந்த அரங்குகளின் ஊடாக டிஜிட்டல் பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிங்கப்பூரின் குற்றவியல் சட்டத்தில் செவ்வாயன்று நாடாளுமன்றம் திருத்தங்களை நிறைவேற்றியது, இதன் மூலம் மோசடி செய்பவர்கள் கட்டாயமாக பிரம்படிக்கு உட்படுத்தப்படுவார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.





