கர்நாடகாவில் பரபரப்பு – அதிகாரிகள் தொல்லை… பேருந்தில் விஷம் குடித்த நடத்துனர்!
கர்நாடகாவில் அதிகாரிகளின் தொல்லையால் மனமுடைந்த கேஎஸ்ஆர்டிசி பேருந்து நடத்துநர் விஷம் குடித்து மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநில சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் நடத்துநர் ஒருவர், அதிகாரிகளின் தொல்லையால் மனமுடைந்து ஓடும் பேருந்தில் விஷம் குடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஷிவமோகாவில் கேஎஸ்ஆர்டிசியில் நடத்துநராக பணிபுரிபவர் பசவராஜ்(39). இவர் ஹொன்னாலி பணிமனையில் நடத்துநராக பணிபுரிகிறார்.
கடந்த 10 ஆண்டுகளாக கேஎஸ்ஆர்டிசியில் பணிபுரியும் பசவராஜ், அதிகாரிகளின் தொல்லையால் நேற்று விஷம் குடித்தார். ஷிமோகா- பத்ராவதி வழித்தடத்தில் இயங்கும் பேருந்தில் நடத்துநராக நேற்று பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் பணிமனைக்கு அழைத்தனர்.
இதனால் மனமுடைந்த நடத்துநர் பசவராஜ், நேற்று மாலை பேருந்தில் விஷம் குடித்து மயங்கி விழுந்தார். இதைப் பார்த்த மற்ற ஊழியர்கள், உடனடியாக பசவராஜை மீட்டு ஷிமோகாவில் உள்ள மெகன் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். தற்போது பசவராஜ் அபாய கட்டத்தைத் தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதிகாரிகளின் தொடர் டார்ச்சரால் பசவராஜ் விஷம் குடித்ததாக தொழிலாளர்கள் கூறினர். இந்த சம்பவம் ஷிவமோகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.