குதிரைக்கு ஆபத்தான நோய் கண்டுபிடிப்பு… நோய் மண்டலமாக ஒரு கிராமமே அறிவிப்பு!
பெங்களூருவில் குதிரைக்கு ஆபத்தான கிலாண்டர்ஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அந்த குதிரை உள்ள டி.ஜே.ஹள்ளி கிராமம் நோய் மண்டலமாக சுகாதாரத்துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு வடக்கு தாலுகா, டி.ஜே.ஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஏ.ஜே.ஷரீப். இவருக்குச் சொந்தமாக குதிரைகள் உள்ளன. இதில் ஒரு குதிரைக்கு ஆபத்தான கிலாண்டர்ஸ் நோய் (சுரப்பி நோய்) இன்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய் குதிரைகள், கழுதைகளுக்கு வருவதாகும். இந்நோய், பர்கோல்டேரியா மல்லி என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது. மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் முடிச்சுகள் மற்றும் புண்களை இந்தநோய் ஏற்படுத்தும்.
இந்த நோய் முற்றினால் மரணமும் ஏற்படும். இந்த நோய் மனிதர்களுக்கும் பரவக்கூடிய ஒரு ஜூனோடிக் நோயாகும். விலங்கு கையாளுபவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் தொடர்பு கொள்ளும் மற்றவர்கள் பொதுவாக நோய்த்தொற்றுக்கு ஆளாக நேரிடும். வழக்கமான பரிசோதனைகள் மூலம் நோயைக் கட்டுப்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், குதிரைக்கு ஆபத்தான நோய் கண்டறியப்பட்டுள்ளதால், டி.ஜே.ஹள்ளி கிராமத்தில் இருந்து 5 கி.மீ நோய் பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 5 முதல் 25 கி.மீ. பகுதி எச்சரிக்கை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நோயைக் கருத்தில் கொண்டு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்பண்ணைத் துறையினர் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் இப்பகுதியில் குதிரைகள், கழுதைகள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், டி.ஜே.ஹள்ளி கிராமத்தில் குதிரைகளுக்கு கிலாண்டர்ஸ் நோய் இருப்பதன் அறிகுறிகள் தென்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்ய வேண்டும் என சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து விலங்கு கையாளுபவர்களையும் நாங்கள் மருத்துவ ரீதியாக பரிசோதிக்கிறோம். இந்த தொற்று அவர்களின் உறுப்புகளை விரைவாக பாதித்து மரணத்திற்கு வழிவகுக்கும். பெங்களூருவில் 1,200 குதிரைகள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பந்தயக் குதிரைகளின் மருத்துவப் பரிசோதனை அறிக்கை பெறப்படும் என்றும் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.