கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்படவுள்ள மாற்றம்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய இரண்டாவது பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
அதற்காக கட்டுமானப் பணிகளுக்காக விலைமனு கோரப்பட்டுள்ளது.
ஜப்பான் கடனுதவியின் அடிப்படையில் குறித்த முனையம் நிர்மாணிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவன்சந்ர தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டில் இந்த முனையத்தை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டிருந்த போதிலும் பொருளாதார நெருக்கடி காரணமாக குறித்த நடவடிக்கைகள் தடைப்பட்டிருந்தன.
புதிய பயணிகள் முனையத்தின் ஊடாக வருடாந்தம் 9 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கான வசதிகளை வழங்க முடியும் என அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய முதலாவது பயணிகள் முனையத்தின் ஊடாக தற்போது வருடாந்தம் 6 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கான வசதிகள் வழங்கப்படுகின்றன.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய இரண்டாவது பயணிகள் முனையம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் வருடாந்தம் 15 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளுக்கான வசதிகளை வழங்க முடியும் என போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ். ருவன்சந்ர சுட்டிக்காட்டியுள்ளார்.