முக்கிய வீரர்கள் இன்றி இன்று ஆரம்பமாகும் சாம்பியன்ஸ் டிராபி!

இன்று முதல் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதல் போட்டியானது இன்று இந்திய, இலங்கை நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பாகிஸ்தான் கராச்சி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் அணியும் நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளது. இப்படியான சூழலில் பல்வேறு நட்சத்திர வீரர்கள் தங்கள் உடல்நல பிரச்சனை காரணமாக இத்தொடரில் இருந்து வெளியேறிய நிகழ்வுகளும் நடந்துள்ளன.
இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா முதல் உலக்கோப்பை வென்றெடுத்த ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் வரை பலரும் காயங்கள் , தனிப்பட்ட காரணங்களை குறிப்பிட்டு இத்தொடரில் இருந்து வெளியேறி உள்ளனர். இதனால் கிரிக்கெட் ரசிகர்கள் சற்று கவலை அடைந்துள்ளனர். எந்தெந்த அணியில் யார் யார் இல்லை என்பதை கிழே காணலாம்…
இந்தியா :
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா, இவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதுகுத்தண்டில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஹர்ஷித் ராணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா :
உலகக்கோப்பை வெற்றி கேப்டன் பேட் கம்மின்ஸ், கணுக்கால் காயம் காரணமாக விலகியுள்ளார். ஹேசில்வுட் இடுப்பு காயம் காரணமாகவும், மிட்செல் ஸ்டார்க் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் அணியில் இருந்து விலகியுள்ளனர். மிட்செல் மார்ஷ் முதுகு பகுதி காயம் காரணமாகவும் விலகியுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அறிவிக்கப்பட்ட பிறகு மார்கஸ் ஸ்டோயினிஸ் தனது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்து விட்டார். இந்த வீரர்களுக்கு பதிலாக கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் , நியமிக்கப்பட்டு, ஷீன் அபோட், பென் ட்வர்ஷுயிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஸ்பென்சர் ஜான்சன், டான் சங்கா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நியூசிலாந்து :
நியூசிலாந்து அணியில் பெர்கூசன் காலில் காயம் ஏற்பட்டதாலும், பென் சீயர்ஸ் தொடை பகுதியில் காயம் ஏற்பட்டதாலும் இவர்களுக்கு பதிலாக கைல் ஜேமிசன் மற்றும் ஜேக்கப் டஃபி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தென் ஆப்ரிக்கா :
அன்ரிச் நார்ட்ஜே முதுகு பகுதி காயம் காரணமாகவும், ஜெரால்ட் கோட்சி இடது தொடைப்பகுதி காயம் காரணமாகவும் சாம்பியன்ஸ் டிராபி அணியில் இடம்பெறவில்லை.
ஆப்கானிஸ்தான் :
கசன்ஃபர் முதுகு எலும்பு முறிவு காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக நங்கியல் கரோட்டி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் :
சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் அணியில் சைம் அயூப் காயம் காரணமாக விலகியுள்ளார்.
இங்கிலாந்து :
இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தெல் காயம் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து விலகியுள்ளார், அவருக்கு பதிலாக டாம் பாண்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.