சர்வதேச மாணவர் அனுமதிகளை மேலும் கட்டுப்படுத்த கனடிய அரசு முன்னெடுத்துள்ள நடவடிக்கை
தங்கள் நாட்டில் தற்காலிக குடியிருப்பு வாசிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் ‘ஸ்டெடி பர்மிட்’ அனுமதியை குறைக்கும் வகையிலான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது கனடா அரசு.
இது குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிட்டது கனடா. மாணவர்களின் பர்மிட் என்று மட்டும் இல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கான அனுமதி அளிக்கும் விதிகளிலும் சில மாற்றங்களை அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
“இந்த வருடம் 35 சதவீதத்துக்கும் குறைவான சர்வதேச மாணவர் பர்மிட்களை நாங்கள் வழங்குகிறோம். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை 10 சதவீதம் குறையும். தேசத்துக்கு வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் வருவது பொருளாதாரத்துக்கு வலு சேர்க்கும். அதே நேரத்தில் மாணவர்களை தவறான பாதையில் சிலர் பயன்படுத்திக் கொள்வதை அனுமதிக்க முடியாது. அதனால் தான் வெளிநாட்டவரை அனுமதிப்பதில் விதிகளை மாற்றி உள்ளோம்” என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
அந்த நாட்டின் குடியேற்ற தரவுகளின் படி 2023-ல் 5,09,390 பேர், 2024-ன் முதல் ஏழு மாதங்களில் 1,75,920 பேர் என வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கு அனுமதி அளித்துள்ளது. அடுத்த ஆண்டு கனடாவில் தேர்தல் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு முடிவுகளில் ட்ரூடோவின் தரப்பு பின்னடைவை எதிர்கொண்டது.
இந்த சூழலில்தான் இந்த நகர்வை ட்ரூடோ அரசு மேற்கொண்டுள்ளது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.