விவசாயி ஒருவர் கொடூர கொலை… 9 ஆண்டுகள் காத்திருந்து பழிக்கு பழி வாங்கிய சம்பவம் !
நிலத்தகராறில் பழிக்குப்பழியாக 9 ஆண்டுகளுக்குப் பின் விவசாயி ஒருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கோலார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டம், மாலூர் தாலுகாவில் மஸ்தி ஹோப்ளியில் உள்ள நாகதேவனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சென்னப்பா(41). இவர் அவரது வீட்டில் இன்று காலை கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த சம்பவம் குறித்த தகவல் அறிந்த பொலிஸார், விரைந்து வந்து சென்னப்பா உடலை மீட்டு விசாரணை நடத்தினர்.
அப்போது நிலத்தகராறில் பழிக்குப்பழியாக இந்த கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. சென்னப்பா உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த பொலிஸார், இக்கொலை தொடர்பாக அதே கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ், மஞ்சுநாத், நரசிம்மய்யா ஆகியோரை கைது செய்தனர். இக்கொலை தொடர்புடைய முரளி என்பவரை தேடி வருகின்றனர்.
இக்கொலை சம்பந்தமாக பொலிஸார் கூறுகையில்,” அப்பய்யா, நரசிம்மய்யா குடும்பத்தினர் நெருக்கமான உறவினர்கள். இவர்களுக்குள் நிலத்தகராறு நீண்ட காலமாக இருந்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2015-ம் ஆண்டு நரசியம்மாவின் மகன் கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால் நரசிம்மய்யா குடும்பத்தினர் அப்பய்யா குடும்பத்தினர் மீது கோபமாக இருந்தனர்.
இந்த நிலையில் இன்று காலையில், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த அப்பய்யாவின் மருமகன் சென்னப்பாவை கத்தியால் நரசிம்மய்யா மற்றும் அவரது கூட்டாளிகள் குத்திக் கொலை செய்துள்ளனர். இக்கொலை தொடர்பாக உடனடியாக மூவரை கைது செய்துள்ளோம். மேலும் ஒருவரைத் தேடி வருகிறோம்” என்றனர்.
நிலத்தகராறில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு பழிக்குப் பழியாக ஒருவர், கொலை செய்யப்பட்ட சம்பவம் கோலார் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.