Test – இலங்கை அணியின் சுழலில் சிக்கி தவிக்கும் நியூசிலாந்து
இலங்கை- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது. சண்டிமல் 116 ஓட்டங்கள், கமிந்து மெண்டிஸ் 182 ஓட்டங்கள் , குசால் மெண்டிஸ் 106 ஓட்டங்கள் ஆகியோர் சதம் விளாசி இலங்கை முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 602 ரன்கள் குவித்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
பின்னர் நியூசிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2வது நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.
இன்று 3வது நாள் ஆட்டம் தொடங்கிய நிலையில் பிரபாத் ஜெயசூர்யாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. சான்ட்னெர் மட்டும் தாக்குப்பிடித்து 29 ரன்கள் அடித்தார். பிரபாப் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
முதல் இன்னிங்சில் இலங்கையை 200 ரன்களுக்கும் அதிகம் முன்னிலை பெற்றதால் நியூசிலாந்து பாலோ-ஆன் ஆனது.
இலங்கை அணியை பாலோ-ஆன் கொடுத்து நியூசிலாந்தை மீண்டும் பேட்டிங் செய்ய சொன்னது. அதன்படி 514 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது.
2வது இன்னிங்சில் டாம் லாதம் ரன்ஏதும் எடுக்காமல் பெய்ரிஸ் பந்தில் ஆட்டமிழந்தார். இன்றைய 3வது நாள் முடிவில் நியூசிலாந்து அணி 5 விக்கெட் 199 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க இன்னும் 315 ஓட்டங்கள் தேவையிருப்பதால் நியூசிலாந்து தோல்வியை சந்திக்கும் நிலையில் உள்ளது.