தென் கொரியாவை உலுக்கும் பயங்கர காட்டுத் தீ! மக்களை வெளியேற உத்தரவு

தென் கொரியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் அப்பகுதி மக்களை வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் சான்சியோங் மாகாணத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் காட்டுத் தீ உருவாகி அப்பகுதி முழுவதும் பரவியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்நாட்டின் தீயணைப்புப் படையினர் அந்த தீயை அணைக்க கடுமையாக போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை 3 மணியளவில் 65 சதவிகித நெருப்பு அணைக்கப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிகள் சுமார் 290 ஹெக்டேராக விரிவடைந்துள்ள நிலையில் அப்பகுதியைச் சுற்றியுள்ள 8 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை சூரியன் மறைவதற்கு முன்னால் தேவையான அனைத்து உபகரணங்களையும் பயன்படுத்தி அந்த காட்டுத் தீயை அணைக்க அந்நாட்டு மீட்புப் படைகளுக்கு தென் கொரியாவின் இடைக்கால அதிபர் சோய் சங்-மோக் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த காட்டுத் தீயினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படையினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.