இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்தும் பதற்றம்-அமைச்சரின் வீட்டுக்கு தீவைப்பு

பழங்குடியினர் மற்றும் பழங்குடியினர் அல்லாதோர் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பல நாட்களாக பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூரில் புதன்கிழமை மீண்டும் வன்முறை வெடித்தது. இம்பால் கிழக்கு மற்றும் காங்போப்கி மாவட்டங்களின் எல்லையில் உள்ள அகிஜங் கிராமத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதுடன் பத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இம்பால் மேற்கு பகுதியில் உள்ள மாநில தொழில் துறை அமைச்சர் நெம்சா கிபிசனின் உத்தியோபூர்வ இல்லத்தை இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கி தீ வைத்தனர்.
இந்த சம்பவம் நேற்று மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தின் நடந்த போது அமைச்சர் வீட்டில் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரின் இல்லத்திற்கு தீ வைத்தவர்களை பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர். கமென்லோக் கிராமத்தில் பல வீடுகளை குற்றவாளிகள் எரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்க அதிக ஆபத்துள்ள பிரதேசங்களில் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில், தெங்னௌபால் மற்றும் இம்பால் கிழக்கு மாவட்டங்களில் இருந்து துப்பாக்கிகளுடன் 63 வெடிப்பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதுவரை மொத்தம் ஆயிரத்து 40 துப்பாக்கிகள், 13 ஆயிரத்து 601 தோட்டாக்கள் மற்றும் 230 வகையான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மணிப்பூர் பாதுகாப்பு ஆலோசகர் குல்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் அதிகாரிகள் காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவுச் சட்டம் பிறப்பித்திருந்தனர்.
தற்போது அந்த ஊரடங்கு உத்தரவு காலை 5 மணி முதல் காலை 9 மணி வரை குறைக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரின் 16 மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை மணிப்பூர் மாநிலம் முழுவதும் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.