17 வருடங்கள் பிறகு வங்கதேச வாக்காளர் பட்டியலில் இணைந்த தாரிக் ரஹ்மான்
லண்டனில்(London) 17 ஆண்டுகளுக்கும் மேலான சுய-நாடுகடத்தலில் இருந்து திரும்பிய இரண்டு நாட்களுக்குப் பிறகு, பங்களாதேஷின்(Bangladesh) வாக்காளர் பட்டியலில் தன்னைப் பதிவு செய்து தேசிய அடையாள அட்டை(NIC) பெறுவதற்கான நடவடிக்கைகளை பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின்(BNP) செயல் தலைவர் தாரிக் ரஹ்மான்(Tariq Rahman) முடித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின்(Khaleda Zia) 60 வயதான மகன், கடுமையான பாதுகாப்பின் கீழ் டாக்காவில்(Dhaka) உள்ள தேர்தல் ஆணைய(EC) அலுவலகத்திற்குச் சென்று பயோமெட்ரிக் சேர்க்கைக்காக கைரேகைகள்(fingerprints) மற்றும் கருவிழி ஸ்கேன்களை(iris scans) வழங்கியுள்ளார்.
முன்னதாக அவர் தனது வாக்காளர் பதிவு விண்ணப்பத்தை இணையவழியில் சமர்ப்பித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தாரிக் ரஹ்மான் ஏற்கனவே இணையவழியில் படிவத்தை பூர்த்தி செய்து, தற்போது கைரேகைகள் மற்றும் கருவிழி ஸ்கேன் ஆகியவற்றை வழங்கி பதிவை முடிக்க வந்துள்ளார்” என்று தேர்தல் ஆணையத்தின் தேசிய அடையாளப் பதிவுப் பிரிவின் இயக்குநர் ஜெனரல் ஹுமாயூன் கபீர்(Humayun Kabir) செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும், அவருக்கு 24 மணி நேரத்திற்குள் தேசிய அடையாள அட்டை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஹுமாயூன் கபீர் குறிப்பிட்டுள்ளார்.





