ஐ.நா தலையீட்டின் பின்னர் இந்தியாவில் இருந்து வரும் இலங்கை தமிழ் அகதிகள் கைதாவது நிறுத்தம்

போர் அச்சம் காரணமாக தமிழ்நாட்டிற்கு தப்பிச் சென்ற இலங்கையர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பும் போது கைது செய்யப்படுவதால், அவர்களுக்கு வழங்கிய குடியேற்ற உதவியை ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் நிறுத்தியதை அடுத்து, தடைகளை நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
“போரின் போது அகதிகளாக இந்தியாவின் தமிழ்நாட்டிற்குச் சென்ற இலங்கை குடிமக்கள், எங்கள் சொந்த குடிமக்கள், ஒரு குழு இருப்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் இப்போது இந்த நாட்டிற்கு, தங்கள் தாயகத்திற்குத் திரும்பி வருகின்றனர்.
இரண்டு சந்தர்ப்பங்களில், அவர்கள் இங்கு வந்தபோது இரண்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குடிவரவுச் சட்டங்களின்படி அவர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறவில்லை அல்லது அங்கீகரிக்கப்பட்ட துறைமுகத்தின் ஊடாக அவர்கள் வெளியேறவில்லை என்பதற்காக குடிவரவுச் சட்டங்களின் கீழ் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். இந்த விடயத்தில் நாங்கள் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.”
அந்தத் தடைகளை நீக்க அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள் நடவடிக்கைகள் எடுக்க எதிர்பார்ப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
“தற்போது இந்தியாவில் உள்ள எங்கள் குடிமக்கள் தடையின்றி இந்த நாட்டிற்குத் திரும்புவதற்குத் தேவையான வசதிகளை வழங்குமாறு ஜனாதிபதி குறிப்பாக அறிவுறுத்தியுள்ளார். தற்போது, நாங்கள் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை தயாரித்துள்ளோம். அந்தத் தடைகள் அனைத்தையும் நீக்கி, அடுத்த இரண்டு அல்லது மூன்று வாரங்களில் அவர்களை இந்த நாட்டிற்கு அழைத்து வருவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாம் எதிர்பார்க்கின்றோம்.”
இலங்கை வந்தவுடன் கைது செய்யப்படுவார்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், இலங்கைத் தமிழ் அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்புவதை ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தி இந்து அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தது.
ஓகஸ்ட் 14, 2025 அன்று திருச்சியிலிருந்து கொழும்புக்கு ஏழு அகதிகளை திருப்பி அனுப்புவது கடைசி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. இலங்கைக்குத் திரும்பும்போது குடிவரவுச் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் குறைந்தது நான்கு அகதிகள் தடுத்து வைக்கப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் (UNHCR) திருப்பி அனுப்பப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட ஸ்ரீமன் ரிச்சர்ட் செல்வச்சந்திரம் (54), ஓகஸ்ட் 12, 2025 அன்று கொழும்பு சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தவுடன் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இருப்பினும், அவர் சுயமாக இந்த நாட்டுக்குத் திரும்பும் ஆவணங்களை மதிப்பாய்வு செய்ததில் அவர் திரும்பி வருவது குறித்து எந்த பாதுகாப்பு பிரச்சினைகளும் இருக்கவில்லை என தி இந்து செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோல், உள்நாட்டுப் போரின் போது பல தசாப்தங்களுக்கு முன்பு நாட்டை விட்டு வெளியேறிய மற்றொரு தமிழ் அகதி மே 28, 2025 அன்று யாழ்ப்பாணத்தில் தரையிறங்கிய பின்னர் கைது செய்யப்பட்டார்.
ஓகஸ்ட் முதல் வாரத்தில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) உதவியின்றி யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் மூலம் வந்த இலங்கை தமிழ் தம்பதியினரும் கைது செய்யப்பட்டனர். இந்த தம்பதி 1996 முதல் இந்தியாவின் தமிழ்நாட்டில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இலங்கைக்கு வந்தவுடன், அவர்கள் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தி இந்து செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“தாமாக நாடு திரும்பும் அகதிகளின் பாதுகாப்பையும் கண்ணியத்தையும் உறுதி செய்வதே அடிப்படைக் கொள்கை. குற்றவியல் வழக்கு நிலுவையில் இல்லாவிட்டால் கைது செய்யப்படக்கூடாது. இனங்களுக்கிடையேயான மோதலில் தங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்ற அச்சத்தில் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் அகதிகள், முறையான குடியேற்றச் சட்டங்களைப் பின்பற்றாததற்காக மன்னிக்கப்படுவார்கள்”, என மீண்டும் நாட்டுக்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள மூத்த இந்திய அதிகாரி ஒருவர் தி இந்துவிடம் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்குத் திரும்பும் அகதிகளைத் தடுத்து நிறுத்துவது குறித்து இராஜதந்திர வழிகளில் விவாதிக்கப்படுமென தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
“குடியேற்றச் சட்டங்களை மீறியதற்காக அகதிகள் கைது செய்யப்படமாட்டார்கள் என்றும், அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள் என்றும் இலங்கை அதிகாரிகளிடமிருந்து உத்தரவாதம் கிடைக்கும் வரை திருப்பி அனுப்பும் செயல்முறை நிறுத்தி வைக்கப்படும்” என அதிகாரி குறிப்பிட்டதாக தி இந்து செய்தி மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.