தமிழகம் – கடலூரில் ரசயான வாயு கசிவால் 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்

கடலூரில் செயல்பட்டுவரும் ராசாயன தொழிற்சாலையில் திடீரென வாயு கசிவு ஏற்பட்டது. இதனால், அப்பகுதியில் வசிக்கும் 70க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டன.
இதைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் அருகே உள்ள சிப்காட் தொழிற்சாலை வளாகத்தில் 40க்கும் மேற்பட்ட ரசாயன தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
செப்டம்பர் 6ஆம் திகதி அதிகாலை கிரிம்சன் ஆர்கானிக் ராசாயன தொழிற்சாலையில் திடீரெனப் பயங்கரச் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து, வாயு கசிவு ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாகக் காட்சியளித்தது.
சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்த மக்கள், காற்று மண்டலத்தில் வாயு பரவி இருப்பதை உணர்ந்தனர்.இதில், 70க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், சம்பந்தப்பட்ட தொழிற்சாலையின் அலுவலகத்தையும் காவலாளி அறையையும் அடித்து நொறுக்கினர்.
தங்களுக்கு உரிய இழப்பீடும் பாதுகாப்பும் வழங்கக் கோரி மக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து கடலூர் – சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொழிற்சாலையில் உள்ள பாய்லருக்கு செல்லும் குழாயில் இருந்த ‘கேஸ்கட்’ திடீரென உடைந்ததால் வாயு கசிவு ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.