சன்டோரியின் தலைமை நிர்வாக அதிகாரி தகேஷி நினாமி ராஜினாமா

ஜப்பானின் மிகவும் பிரபலமான வணிகத் தலைவர்களில் ஒருவரான டகேஷி நினாமி, சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மருந்து தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, சன்டோரி என்ற பான நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஜப்பானின் கடுமையான கஞ்சா சட்டங்களை மீறியதாக சந்தேகிக்கப்படும் நினாமியை போலீசார் விசாரித்து வருவதாக டோக்கியோ செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகள் குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவிக்காத நிர்வாகி, வெளிநாட்டு பயணத்திலிருந்து திரும்பிய பிறகு ராஜினாமா செய்ய முன்வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மாதம் டோக்கியோவில் உள்ள அவரது சொகுசு குடியிருப்பை போலீசார் சோதனை செய்ததாகவும், சிறுநீர் மாதிரி எடுக்கப்பட்டதாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவித்தன. சட்டவிரோத பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
கஞ்சாவில் உள்ள மனோவியல் மூலப்பொருளான THC கொண்ட தயாரிப்புகளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்ததாக நினாமி சந்தேகிக்கப்படுவதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
CBD(கஞ்சா செடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு உணவுகளில் சேர்க்கக்கூடிய கன்னாபினாய்டு) தயாரிப்புகள் ஜப்பானில் சட்டப்பூர்வமானவை என்றாலும், அவற்றில் THC இல்லாதிருக்க வேண்டும். கஞ்சா வைத்திருந்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.
எந்தத் தவறும் செய்யவில்லை என்று மறுத்த நினாமி, அந்த மருந்துகள் சட்டப்பூர்வமானவை என்ற நம்பிக்கையில் தான் வாங்கியதாக நிறுவனத்திடம் கூறியதாக சன்டோரியின் தலைவர் நோபுஹிரோ டோரி செவ்வாயன்று தெரிவித்தார்.