ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கையின் நிலைப்பாடு – சுமந்திரன் அதிருப்தி

போர்க்காலத்தில் இலங்கையில் இடம்பெற்ற சட்டவிரோத செயற்பாடுகள், மனித உரிமை மீறல்கள், சர்வதேச சட்டங்களை மீறியமை சம்பந்தமான சாட்சியங்களை சேகரிப்பதற்கான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் பொறிமுறையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உண்மைகளை மூடி மறைக்க வேண்டும் என்ற தோரணையிலேயே தற்போதைய அரசாங்கமும் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
இன்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்;
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் தற்பொழுது ஜெனீவாவில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இந்தக் கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் கடந்த 25ஆம் திகதி இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உரையொன்றினை ஆற்றியிருந்தார்.
அதைத் தொடர்ந்து ஜெனீவாவுக்கான இலங்கைப் பிரதிநிதி இலங்கையினுடைய நிலைப்பாடு தொடர்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த இரண்டு உரைகளையும் பார்க்கும் போது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2012 ஆம் ஆண்டிலிருந்து பொறுப்புக்கூறலையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதற்கு எடுத்திருக்கின்ற முயற்சிகளுக்கு தடை செய்கின்ற வண்ணமான கூற்றுக்கள் வெளிவருகின்றன.
புதிய அரசாங்கம் நல்லிணக்கம் சம்பந்தமான விடயங்களை வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் குறிப்பிட்ட 3 நிறுவனங்களான காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட அலுவலகம் ஆகியவற்றைப் பலப்படுத்துவதற்கான பொறிமுறை ஏற்படுத்துவதன் மூலம் இந்த நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என குறிப்பிட்டிருக்கின்றார்.
மேற்குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வரவு செலவுத்திட்டத்தில் போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றுமுழுதாக நீக்கப்படும் என்று குறிப்பிட்ட இந்த அரசாங்கம் அதற்குப் பதிலாக வேறு ஒரு சட்டத்தை இயற்றுகின்றோம் என்று சொல்லுகின்றார்கள்.”