தெற்கு அரசியலில் திடீர் திருப்பம்: கொழும்பை பரபரப்பாக்கியுள்ள “அரசியல் சந்திப்பு”
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்குரிய முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என அறியமுடிகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் கொழும்பில் இன்று (30) முக்கியத்துவமிக்க சந்திப்பொன்று நடந்துள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவின் சகாக்களான ருவான் விஜேவர்தன, அகில விராஜ்காரியவசம் மற்றும் நவீன் திஸாநாயக்க ஆகியோர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை அவசரமாக சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
ருவான் விஜேவர்தன ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும், அகிலவிராஜ் காரியவசம் உப தலைவராகவும் பதவி வகிக்கின்றனர். நவீன் திஸாநாயக்க கட்சியின் முன்னாள் தேசிய அமைப்பாளர் ஆவார்.
இரு தரப்பு இணைப்புக்கு சஜித் பிரேமதாச ஏற்கனவே பச்சைக்கொடி காட்டியுள்ளார். இந்நிலையில் ரணிலின் விருப்பத்தையும் இவர்கள் இச்சந்திப்பின்போது வெளிப்படுத்தி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரு கட்சிகளும் தனிக்கட்சியாக மாறுவதா அல்லது கூட்டணியாக செயல்படுவதா என்பது பற்றி இறுதி முடிவு இன்னும் ஓரிரு நாட்களுக்குள் எடுக்கப்படவுள்ளது.
இச்சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பதிவிட்டுள்ளார்.
அப்பதவியில், “ எமது தாய்நாடு எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தேசிய இலக்குகளை பயனுள்ள மற்றும் திறமையான முறையில் நிறைவேற்ற புதுமையான கொள்கை நடவடிக்கைகளை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்து பயனுள்ள மற்றும் நேர்மறையான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.” – என்று குறிப்பிடப்பட்டுள்ளது.





