இலங்கை முழுவதும் ஏற்பட்ட திடீர் மின்தடை மக்கள் பெரும் அசௌகரியம்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/image_4362e67237.jpg)
இலங்கையில் நேற்று 11.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் மின் தடை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
திடீர் மின் தடையால் பெரும்பாலான பகுதிகளில் நீர் விநியோகமும் தடைபட்டதோடு, வீதி சமிஞ்ஞைகளும் செயலிழந்தன.
கொழும்பிலுள்ள தேசிய மின் கட்டமைப்பில் ஏற்பட்ட ஏற்றத்தாழ்வு காரணமாகவே இந்த மின் விநியோகத் தடை ஏற்பட்டதாக ஆரம்பத்தில் இலங்கை மின்சாரசபை அறிவித்தது. எவ்வாறிருப்பினும் பாணந்துறை மின் இணைப்பு துணை மின்நிலையத்தில் குரங்குகள் மோதியதால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டதாக மின்சக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் மின் விநியோகத்தில் பெரும் தடங்கலை ஏற்படுத்தியதாகவும், இதனால் நாடு முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு பின்னர் இந்த நிலைமையை ‘பாணந்துறை துணை மின்நிலையத்தில் அவசரநிலை’ என்று அறிவித்த போதிலும், அமைச்சரின் கூற்றை உறுதிப்படுத்தவில்லை.
நிலைமையை சரி செய்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், விரைவில் மின் விநியோகத்தை மீண்டும் வழங்க குழுக்கள் துரிதமாக செயற்பட்டு வருவதாகவும் அமைச்சினால் அறிவிக்கப்பட்டது. அதற்கமைய சுமார் இரண்டரை மணித்தியாலங்களின் பின்னர் சில முக்கிய இடங்களில் மாத்திரம் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது.
அதற்கமைய பிற்பகல் 2.30 மணியளவில் கொழும்பு தேசிய மருத்துவமனை, அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையம், பியகம மற்றும் சபுகஸ்கந்த உள்ளிட்ட பல முக்கியமான இடங்களில் மின் விநியோகம் வழமைக்கு திரும்பியது. அதனையடுத்து சுமார் மாலை 3 – 4 மணிக்கிடையில் நாடு முழுவதும் மின் விநியோகம் வழங்கப்பட்டது.