சூடான் உள்நாட்டு போர் ; பட்டினியால் 60 குழந்தைகள் மரணம்!
சூடானில் பட்டினியால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. இதனால், சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் பிற பகுதிகளில் உள்நாட்டு போர் நடந்து வருவதால் மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
கிட்டத்தட்ட இந்த போரில் 1000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த போரை நிறுத்த வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை வைத்து வருகிறது. இந்நிலையில், கார்ட்டூமில், அல்-மய்கோமாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் தாக்குதல் சம்பவம் நடந்தது.
இதனையடுத்து, அப்பகுதிக்கு வந்த சேர வேண்டிய உணவுகள், அத்தியாவசியப் பொருட்கள் எதுவும் வராததால் பட்டினியால் கடந்த வாரத்தில் மட்டும் 26 குழந்தைகள் உயிரிழந்தனர்.
இது படிப்படியாக உயர்ந்து தற்போது சுமார் 60 குழந்தைகள் உணவு இல்லாமல் உயிரிழந்துள்ளனர். சூடான் முழுவதும் பட்டினியால் சுமார் 341 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.