அமெரிக்காவில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு, கத்திக்குத்து – 6 பேர் பலி!
அமெரிக்காவில் இரு வேறு இடங்களில் நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் கத்திக்குத்து சம்பவங்களில் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களாக துப்பாக்கி கலாச்சாரம் மேலோங்கி வருகிறது. சொந்த பிரச்சினைகள் காரணமாகவும், போதையிலும் துப்பாக்கிகளை பயன்படுத்தி பொது இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தி அப்பாவிகளை படுகொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்நாட்டு அரசு துப்பாக்கிகள் வைத்திருப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து ஆலோசித்து வந்தாலும், தொடரும் இந்த சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில், நியூயார்க் நகரில் மர்ம நபர் ஒருவர் கத்தியால் குடும்பத்தினரை குத்துவதாக வந்த புகாரை அடுத்து, 2 பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்கள் அங்கு சென்ற போது, வீட்டின் மையத்தில் இருந்த சோஃபா எரிந்து கொண்டிருந்ததோடு, 11 மற்றும் 12 வயதுடைய இரண்டு குழந்தைகள் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்து கிடந்தனர்.
அப்போது கொலையாளி பொலிஸாரையும் கத்தியால் குத்தி காயப்படுத்தியதை அடுத்து, பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் அவன் உயிரிழந்தான். இதையடுத்து கத்திக்குத்தில் படுகாயமடைந்த 2 பொலிஸார் மற்றும் வீட்டிலிருந்த பெண் ஒருவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதேபோல் டல்லாஸ் நகரில் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்பதாக அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலை அடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணை நடத்திய போது, வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்டு ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.
மேலும் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஒரு வயது குழந்தை மற்றும் 15 வயது குழந்தை ஆகியோரை பொலிஸார் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஒரு வயது குழந்தை லோகன் உயிரிழந்தான். இதையடுத்து பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
இரண்டும் வெவ்வேறு சம்பவங்கள் என்றாலும், அடுத்தடுத்து ஞாயிற்றுக்கிழமை இரவில் நிகழ்ந்ததால் பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியோடிய மர்ம நபர் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.