இலங்கையின் அரசாங்க வருமானம் 40.5 வீதத்தால் அதிகரிப்பு!
இந்த வருடத்தின் முதல் 8 மாதங்களில் இலங்கையின் அரசாங்க வருமானம் 40.5 வீதத்தால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இது பொருளாதாரம் நல்ல திசையில் பயணிக்கிறது என்பதை எடுத்துக்காட்டுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுடன் ஒப்பிடும் போது இந்த வளர்ச்சி காட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டுக்கான தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் நிலை அறிக்கையை வெளியிடும் போது நிதி அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
அதன்படி, 2024 ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருமானம் உட்பட அரசாங்கத்தின் மொத்த வருமானம் 2,557.79 பில்லியன் ரூபாவாகும்.
இந்தக் காலப்பகுதியில் மொத்த வரி வருமானம் 2,348.53 பில்லியன் ரூபாவாக பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், அதில் 624.67 பில்லியன் ரூபா வருமான வரிகளாகவும், 1,421.34 பில்லியன் ரூபா பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிகளாகவும் பதிவாகியுள்ளது.
பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு விதிக்கப்பட்ட வரிகளில் பிரதான அங்கமாக இருந்த VAT வரி வருமானம் 842.48 பில்லியன் ரூபாவாக இருந்தமை 87.2 வீதத்தால் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த காலப்பகுதியில் கலால் வருமானம் 385.74 பில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டுள்ளது, இது 08 மாத காலப்பகுதியில் 42 வீதத்தால் அதிகரித்துள்ளது.
வரி அல்லாத வருமானம் 31.7 வீதத்தால் அதிகரித்து 209.26 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இந்த வருட இறுதிக்குள் மதிப்பிடப்பட்ட அரசாங்க வருமானம் 4,107 பில்லியன் ரூபாவாகும் எனவும் நிதியமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.