இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் – விசாரணையில் களமிறங்கிய விசேட குழு
இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள் தொடர்பில் விசாரணை நடத்த பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் அவர்களினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பொலிஸ் மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
அண்மையில் (20) இந்தியாவின் அஹமதாபாத்தில் நான்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர், அவர்கள் தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு தயாராக வந்ததாகக் கூறப்படுகிறது.
இதன்படி, கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான மொஹமட் நுஸ்ரத் நீர்கொழும்பைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொழும்பில் வசிக்கும் 27 வயதான மொஹமட் நஃப்ரான், 43 வயதான மொஹமட் ரஷ்டீன் மற்றும் 35 வயதான மொஹமட் ஃபரிஷ் ஆகியோர் கைது செய்யப்பட்ட ஏனைய பயங்கரவாதிகளாவர்.
அவர்கள் இந்த நாட்டிலிருந்து சென்னை வழியாக அஹமதாபாத் நோக்கி இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தில் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இரு நாடுகளின் கையடக்கத் தொலைபேசிகள், கரன்சிகள் மற்றும் விமானப் பயணச்சீட்டுகள் என்பன அவர்களிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவரின் சூட்கேஸில் ISIS கொடியும் காணப்பட்டது.
பாகிஸ்தானில் இருந்து செயற்படும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவரான அபுவை கடந்த பெப்ரவரி மாதம் சமூக ஊடகங்கள் மூலம் இலங்கையர்களின் இந்தக் குழு அடையாளம் கண்டுகொண்டதாகவும் பின்னர் அவர்கள் வலுவான ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவாளர்களாக மாறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில், அஹமதாபாத் நகருக்கு அருகில் உள்ள நானாச்சிடோலா பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் தொடர்பான தகவல்கள் இந்திய பாதுகாப்புப் படையினருக்கு அம்பலமாகியுள்ளன.
கைது செய்யப்பட்ட நான்கு இலங்கை ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட வாய்மொழி மற்றும் சோதனை ஆதாரங்களின் அடிப்படையில், நாட்டின் தண்டனைச் சட்டம், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் சட்டவிரோத ஆயுதங்கள் சட்டம் ஆகியவற்றின் கீழ் எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.