இலங்கை ஜனாதிபதி தேர்தல் – இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முடிவால் சிக்கல்?
ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் இந்த முடிவில் எந்த சிக்கலும் இல்லை என இலங்கைத் தமிழரசுக் கட்சி அறிவித்துள்ளது.
வவுனியாவில் நேற்று கூடிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு, சஜித் பிரேமதாசவை ஆதரிக்கவும், பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ள அரியநேத்திரனை போட்டியிலிருந்து விலகுமாறு கோரவும் தீர்மானித்தது.
இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் ஊடகங்களுக்கு அறிவித்தார்.
அதேநேரம், கட்சியின் மத்திய செயற்குழு மேற்கொண்ட இந்தத் தீர்மானம் குறித்து தமக்கு அறிவிக்கப்படவில்லை என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இது தொடர்பாக நேற்றைய மத்தியக் குழுக் கூட்டத்துக்கு தலைமை தாங்கிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவர் சீ. வீ. கே. சிவஞானத்தைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, மத்தியகுழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்பதை மாவை சேனாதிராஜா முன்கூட்டியே அறிவித்திருந்ததாகத் தெரிவித்தார்.
அத்துடன் கட்சியின் யாப்பின் பிரகாரம் மத்திய செயற்குழு கூட்டத்துக்குத் தேவையான கோரம் இருந்ததாகவும், எனவே இந்தத் தீர்மானத்தில் எந்த சிக்கலும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தீர்மானம் ஒன்றை எடுக்கத் தமிழரசுக் கட்சியின் யாப்பின் படி மத்திய செயற்குழு கூட்டத்தில் குறைந்தபட்சம் 11 பேர் இருக்க வேண்டும்.
எனினும் நேற்றைய கூட்டத்தில் 26 பேர் இருந்ததாகவும் சீ. வீ. கே. சிவஞானம் தெரிவித்தார்.