பிள்ளைகளுக்காக வெளிநாட்டில் இருந்து தாயை அழைத்துவரும் அரசாங்கம்
குருநாகல் கீழ் கிரிபாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தனியாக வசிக்கும் மூன்று பிள்ளைகளை பராமரிப்பதற்காக வெளிநாட்டில் உள்ள தாயை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலையிட்டுள்ளார்.
அதன்படி குறித்த தாய் நாளை காலை நாட்டிற்கு திரும்புவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தாய் வெளிநாடு சென்றதாலும், தந்தை சிறையில் அடைக்கப்பட்டதாலும் அந்த மூன்று பிள்ளைகள் மட்டும் வீட்டில் பாதுகாப்பின்றி உள்ளனர்.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் அவர்களின் பாடசாலைக் கல்வியும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, தனிமையில் இருக்கும் பிள்ளைகளின் தாயை உடனடியாக அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் மனுஷ நாணயக்கார பணிப்புரை விடுத்துள்ளார்.
குவைத் தூதரகத்தின் நேரடித் தலையீட்டின் பேரில் குழந்தைகளின் தாய் இன்று இரவு குவைத்தில் இருந்து இலங்கைக்கு வரும் விமானம் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.