மூன்றாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி – தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது.
இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. இதன் மூலம் இரு போட்டிகளில் வென்று தொடரையும் கைப்பற்றியது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி கடந்த 6 ஆம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 325 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து பேட் செய்த இலங்கை அணி 263 ரன்களை எடுத்தது.
பிறகு, இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி அதிர்ச்சி அளிக்கும் வகையில் 156 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து 219 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கை அணியின் பதும் நிசங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவருடன் களமிறங்கிய திமுத் கருணரத்னே 8 ரன்களிலும், குசல் மெண்டிஸ் 39 ரன்களையும் எடுத்தனர்.
மறுபுறம் நிசங்கா சதம் அடிக்க, ஏஞ்சலோ மேத்யூஸ் 32 ரன்களை எடுத்த நிலையில், இலங்கை அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
போட்டி முடிவில் பதும் நிசங்கா 127 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து சார்பில் க்ரிஸ் வோக்ஸ் மற்றும் கஸ் அட்கின்சன் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இந்த தொடரின் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றிய நிலையில், இலங்கை அணி மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றது அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.