இலங்கைக்கு கிடைக்கவுள்ள 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள்!
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி முடிவு செய்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்தை வலுப்படுத்தும் வகையில் விசேட கொள்கை அடிப்படையிலான கடனாக வழங்க தீர்மானித்துள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கி இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஊடாக வழங்கப்படும் விரிவான நிதி உதவிப் பொதியின் ஒரு பகுதியே இந்த கடன் வசதி என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று அறிவித்த நாணய மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்முதல் விலை 289 ரூபா 89 சதமாக பதிவாகியுள்ளது.
டொலர் ஒன்றின் விற்பனை விலை 303 ரூபா 26 சதங்களாக பதிவாகியுள்ளது. இதன்மூலம், டொலருக்கு நிகரான ரூபாயின் கொள்முதல் விலை சுமார் ஓராண்டுக்குப் பிறகுதான் 300 ரூபாய்க்கும் கீழ் சரிந்தது.