இலங்கை – மஸ்கெலியாவில் மண் மேட்டுக்குள் சிக்கிய அறுவர் பத்திரமாக மீட்பு

மஸ்கெலியா ராணி தோட்டத்தில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு அடித்தளம் வெட்டிக் கொண்டிருந்த வேளையில் புதன்கிழமை (06) காலை 11.45 மணி அளவில் திடீரென மண் திட்டுகள் சரிந்ததால் மண்ணில் புதையுண்டன ஆண்கள் அறுவர், பிரதேசவாசிகளின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
சம்பவத்தை கண்டவர், அபாய குரல் எழுப்பியுள்ளார். அதை கேட்டு, ஓடோடி வந்தவர்கள், அவர்களை காப்பாற்றுவதற்கான முயற்சி செய்தனர். இந்நிலையில், சம்பவத்தை கேள்வியுற்ற மஸ்கெலியா பிரதேச சபை தலைவர், சபையின் உப- தலைவர் மற்றும் உறுப்பினர்கள், செயலாளர் மற்றும் பணியாளர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து அறுவரையும் காப்பாற்றினர்.
காப்பாற்றப்பட்ட யதுர்ஷன் (வயது 28), யோகேஸ்வரன் (வயது 45), ராஜேஸ்வரன் (வயது 38), விஜயலிங்கம் (வயது 45), விஜயகுமார் (வயது 43) மற்றும் ஆறுமுகம் (வயது 45) ஆகிய அறுவரும், சிறு சிறு காயங்களுடன் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.