இலங்கை : பொதுபோக்குவரத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புதிய முயற்சி!
பொது போக்குவரத்து சேவைகளில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக நாளாந்தம் பொலிஸ் நிலையங்களுக்கு தெரிவிக்கப்படும் முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பணிப்புரைக்கு அமைய நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கையொன்று அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்கள் பொதுப் போக்குவரத்து சேவைகளை அதிகம் பயன்படுத்தும் 08.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், 17.00 முதல் 19.00 மணி வரையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அதிக முன்னுரிமை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இங்கு சிவில் உடை அணிந்த பொலிஸ் அதிகாரிகள் குழுக்கள் பஸ்களில் பயணிக்க ஏற்பாடு செய்யப்படுவதோடு, வீதிகள், பஸ் நிலையங்கள், புகையிரத நிலையங்கள் போன்றவற்றில் விசேட கவனம் செலுத்தப்படும்.
சிவில் உடையில் பயணிக்கும் உத்தியோகத்தர்களுக்கு உதவி தேவைப்படும் போது உதவிகளை வழங்குவதற்காக பொலிஸ் உத்தியோகத்தர்களின் குழுக்களை சிவில் உடையில் (குறிப்பாக பிரதான வீதிகளை உள்ளடக்கி) தயார் நிலையில் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.