இலங்கை: போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளுடன் முன்னாள் விசேட அதிரடிப்படை வீரர் கைது
இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைப் பிரிவின் முன்னாள் சிப்பாய் ஒருவரை, ஐஸ் போதைப்பொருள் மற்றும் வெடிமருந்துகளை வைத்திருந்த வேளையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் (STF) கைது செய்துள்ளனர்.
கட்டுபொத்த பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்படும் போது, சந்தேகநபர் 8 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருள், 5 இராணுவ சீருடை ஆடைகள் மற்றும் 6 சுற்று 9 மி.மீ தோட்டாக்கள் வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஆகஸ்ட் 20ஆம் திகதி கட்டுபொத பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரியை தாக்கியதாகவும், அந்த அதிகாரி மற்றும் அவரது ஜீப் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கியதன் பின்னர் வாகனத்தை சேதப்படுத்தியதாகவும் சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதேவேளை, இதே தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.