இலங்கை – தேசபந்து தென்னகோனை பதவியில் இருந்து நீக்க பெருமளவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பு!

தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்குவதற்காக இன்று (05) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரேரணைக்கு ஆதரவாக 177 வாக்குகள் அளிக்கப்பட்டன.
பிரேரணைக்கு எதிராக எந்த வாக்குகளும் இல்லை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் வாக்களிப்பில் இருந்து விலகி இருந்தார்.
அதன்படி, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குவதற்கான நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 17 இன் படி, ஐஜிபி தேசபந்து தென்னகோனை ஐஜிபி பதவியில் இருந்து நீக்குவதற்கான பிரேரணை 177 பெரும்பான்மை வாக்குகளால், அதாவது வராத உறுப்பினர்கள் உட்பட மொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் சபைக்குத் தெரிவித்தார்.
இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர், அதாவது 113 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்களிப்புகளை அளித்து நிறைவேற்ற முடியும்.
தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்த பிறகு, ஐஜிபி பதவிக்கான பெயரை அரசியலமைப்பு சபைக்கு ஜனாதிபதி பரிந்துரைக்க உள்ளார்.