சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும்!!
புதிய கல்வி சீர்திருத்தத்தின் மூலம் சவாலான பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு சிறப்பு ஆதரவு வழங்கப்படும் என்று பிரதமரும் கல்வி அமைச்சருமான டாக்டர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
அரசாங்கம், அதிகாரிகள் மற்றும் மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் எந்தப் பிரச்சினையும் தீர்க்க முடியாதது அல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.
2026 சீர்திருத்தங்களுக்கான தயாரிப்புகள் குறித்து விவாதிக்க, மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கல்குடா மற்றும் ஏறாவூர் வலயக் கல்வி அலுவலகங்களுக்குச் சென்றபோது, கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களைச் சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெத்த அவர் இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “பாடசாலை பெறுபேறுகளைப் பொறுத்தவரை கூட, மட்டக்களப்பு ஒரு கடினமான பகுதி. அதனால்தான் இங்கு கூடுதல் ஆதரவை வழங்குவதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம்,” என்று கூறினார்.
ஒவ்வொரு குழந்தையும் தரமான கல்வியைப் பெறக்கூடிய வகையில், பாடசாலைகள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்வி நிர்வாகத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.
“நாட்டை வளர்ப்பதற்கு கல்வி முக்கியமானது. ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம், எந்தவொரு சவால்களையும் சமாளித்து அனைத்து குழந்தைகளுக்கும் நல்ல எதிர்காலத்தை வழங்க முடியும் என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.





