தென் கொரிய பிரபலம் கம்போடியாவில் சடலமாக மீட்பு
கம்போடியாவில் உள்ள புனோம் பென் அருகே உள்ள ஒரு குளத்தில் சிவப்பு போர்வையில் சுற்றப்பட்ட சடலத்தை கிராம மக்கள் கண்டு மீட்டுள்ளனர்.
இது குறித்து கடந்த 6 ஆம் திகதி பொலிஸாருக்கு அறிவித்திருந்ததாக உள்ளூர் செய்தித்தாள் Rasmei Kampuchea Daily தெரிவித்துள்ளது.
கம்போடிய பொலிசார் பின்னர் பாதிக்கப்பட்டவர் தென் கொரிய பெண் பியோன் ஆ-யங் என அடையாளம் கண்டுள்ளனர்.
30 வயதான அந்த பெண் சமூக ஊடகங்களில் 250,000 க்கும் அதிகமான பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார். கடந்த ஆண்டு லைவ்ஸ்ட்ரீமிங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
கொலைச் சந்தேகத்தின் பேரில் சீன தம்பதியர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள், தண்டனையைத் தவிர்ப்பதற்காக பாதிக்கப்பட்டவரின் உடலை அப்புறப்படுத்தியதாக நம்பப்படுகிறது.
பியோன் ஒரு அறிமுகமானவருடன் கம்போடியாவுக்குச் சென்றிருந்தார், மேலும் அந்தத் தம்பதிக்கு சொந்தமான சட்டவிரோத கிளினிக்கில் சிகிச்சை பெற்றார் என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் ஜூன் 4-ம் திகதி உயிரிழந்ததாக பொலிசாரிடம் தெரிவித்தனர்.
மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய பிரேதப் பரிசோதனை தேவை என்று கம்போடியாவில் உள்ள அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
ஆனால் பியோனின் குடும்பத்தினர் இறுதிச் சடங்கைத் தொடர விரும்பியதால் அதை நிராகரித்ததாக தி கொரியா டைம்ஸ் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை முழுமையாக விசாரிக்குமாறு கம்போடிய பொலிஸாரிடம் கோரியுள்ளதாக தென் கொரிய பொலிஸார் கூறியதாக தி கொரியன் ஹெரால்ட் செய்தி வெளியிட்டுள்ளது.