லாவோஸில் விஷம் கலந்ததாக சந்தேகிக்கப்படும் மது அருந்திய ஆறாவது வெளிநாட்டு சுற்றுலாப் பயணி உயிரிழப்பு
லாவோஸ், தலைநகர் வியன்டியான் அருகே உள்ள வாங் வியங் நகரில் உள்ள பிரபல இரவு நேர மதுபான விடுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, மது குடித்து இறந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.
19 வயதான ஹோலி பவுல்ஸின் குடும்பத்தினர், “உடைந்த இதயங்களுடன்” அவர் இறந்ததை உறுதிசெய்ததாகக் கூறினர், ஒரு வாரத்திற்கும் மேலாக அவர் சுற்றுலா நகரமான வாங் வியெங்கில் நோய்வாய்ப்பட்டார்.
வாங் வியங் நகரில் உள்ள பிரபல இரவு நேர மதுபான விடுதியில் மது குடித்து உற்சாகமாக இருந்த எதிர்பாராத விதமாக வாயில் திடீரென நுரை தள்ளியபடி பலர் மயங்கி விழுந்தனர்.
உயிருக்கு போராடிய 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வைத்தியர்கள் மேற்கொண்ட பரிசோதனையில் அவர்கள் குடித்த மதுவில் விஷத்தன்மை இருந்தது தெரிந்தது.
தகவலறிந்த போலீசார் விஷச்சாராயம் குடித்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்தவர்களை மீட்டு தாய்லாந்துக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
சிகிச்சை பலனளிக்காமல் அமெரிக்காவை சேர்ந்த ஒரு வாலிபர், டென்மார்க் நாட்டை சேர்ந்த இருவர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இருவர், பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் என வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 6 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சிலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விவகாரம் லாவோஸ் நாட்டில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட மதுபான விடுதியின் உரிமையாளர் மற்றும் மேலாளரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் சிலரும் விசாரணை வளையத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை. விசாரணைக்கு பிறகு வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
லாவோஸ் சம்பவத்தைத் தொடர்ந்து அமெரிக்க அரசு, தனது நாட்டு மக்களுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்துள்ளது. லாவோஸ் செல்லும் அமெரிக்கர்கள் அங்கு மெத்தனால் கலந்த மதுவை குடிக்க நேரிடலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்று கூறி உள்ளது. இதேபோல் உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் நாடுகளும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளன.