இந்தியாவில் காது குத்த மயக்க மருந்து போட்ட சிறிது நேரத்திலேயே உயிரிழந்த ஆறு மாத குழந்தை
காது குத்துவதற்காக மயக்க மருந்து செலுத்தப்பட்ட ஆறு மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் கர்நாடகாவில் திங்கட்கிழமை (பிப்ரவரி 3) நடந்துள்ளது.
கர்நாடக மாநிலம், குண்டலுபேட்டையைச் சேர்ந்த ஆனந்த், சுபமானசா தம்பதி, தங்கள் ஆறு மாதக் குழந்தை பிரக்யாத்துக்கு காது குத்துவதற்காக பக்கத்தில் உள்ள பொம்மலாபுரா ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
அங்கு குழந்தைக்கு இரு காதுகளிலும் மயக்க மருந்து ஊசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை நினைவிழந்தது. உடனடியாக குழந்தையை குண்டலுபேட்டை தாலுகா அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் கொண்டு சென்றனர்.
குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், பொம்மலாபுரா அரசு ஆரம்ப சுகாதார மையத்திலேயே குழந்தை இறந்துவிட்டதாகக் கூறி உள்ளனர்.இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர், இது தொடர்பாக ஆரம்ப சுகாதார மைய மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சுகாதாரத் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.
காது குத்தும்போது வலி ஏற்படாமல் இருக்க பணியில் இருந்த டாக்டர் மயக்க மருந்து கொடுத்தார். அப்போது குழந்தைக்கு வலிப்பு ஏற்பட்டு இறந்தது.
உடற்கூறாய்வுப் பரிசோதனைக்குப் பிறகே இறப்புக்கான சரியான காரணம் தெரியவரும். மருத்துவரின் அலட்சியம் உறுதிசெய்யப்பட்டால், உயரதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று குண்டலுபேட்டை தாலுகா சுகாதார அலுவலர் டாக்டர் அலீம் பாஷா கூறினார்.
சம்பவம் குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.