சிங்கப்பூரின் முன்னாள் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் குற்றவாளி என தீர்ப்பு
இன்று உயர் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணையின் முதல் நாளில் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் தாக்கல் செய்த திருத்தத்தைத் தொடர்ந்து, 62 வயதான முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன் ஐந்து குற்றங்களை ஒப்புக்கொண்டார்.
இவ்வழக்கின் நீதிபதி வின்சென்ட் ஹூங் முன்னிலையில், சட்டத்துறை துணைத் தலைவர் டாய் வெய் ஷியோங் தலைமையிலான அரசுத் தரப்பு தமது வாதத்தை தொடங்கியது.
குற்றவியல் சட்டம், செக்ஷன் 165ன் கீழ் நான்கு குற்றச்சாட்டுகளும் குற்றவியல் சட்டம், செக்ஷன் 204Aன் கீழ் ஒரு குற்றச்சாட்டும் ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டது.
தொடக்கத்தில் ஊழல் தடுப்புச் சட்டம், PCAன் கீழ் இரண்டு உட்பட மொத்த 35 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்நோக்கியிருந்தார்.
ஈஸ்வரன் தனது பதவிக்காலத்தில் 4 லட்சத்து 3 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பிலான பரிசு பொருள்களை பெற்றதாகவும், வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
செல்வந்தர் ஓங் பெங் செங்கிடமிருந்து ஈஸ்வரன் விலை மதிப்புள்ள பொருள்களைப் பெற்றதாக குற்றச்சாட்டுகள் தெரிவிக்கின்றன.
அவரே, அக்குற்றங்களை ஒப்புக் கொண்டதால், அவரை குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ஈஸ்வரனுக்கு அதிகபட்சம் 7 மாதம் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கும்படி அரசுத் தரப்பு கோரியது.
அதே வேளையில், ஈஸ்வரனின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் தேவிந்தர் சிங், சிறைத் தண்டனை எட்டு வாரங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தார்.
இரு தரப்பு வாதங்களும் தொடரும் வேளையில், தீர்ப்புக்கான தேதி அக்டோபர் 3ம் திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.