அமெரிக்காவில் அதிர்ச்சி – மருந்துகளுக்கு காத்திருந்த பெண்ணுக்கு பொதியில் வந்த மனிதக் கைகள்
அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் வசிக்கும் பெண், தான் விண்ணப்பம் செய்த மருந்துகளுக்குப் பதிலாகப் பொதியில் மனித கைகள் விநியோகிக்கப்பட்டதனை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது வீட்டிற்கு விநியோகம் செய்யப்பட்ட பொதியை திறந்து பார்த்தபோது, உள்ளே ஐஸ் பேக் செய்யப்பட்ட நிலையில் மனித உடற்பாகங்கள் (மனிதக் கைகள்) இருந்ததைக் கண்டு அந்தப் பெண் உடனடியாகக் காவல்துறையினரைத் தொடர்புகொண்டு தகவல் அளித்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த விசாரணை அதிகாரிகள், பொதியில் வந்த உடற்பாகங்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.
இதனிடையே, நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மனிதப் பாகங்கள் உடலுறுப்பு மாற்று சிகிச்சைக்காக (Organ Transplant) அனுப்பப்படவிருந்தவை என்று தெரியவந்துள்ளது.
இந்தப் பாகங்கள் நாஷ்வில்லே என்ற இடத்தில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியிருந்தது.
ஆனால் விநியோகம் செய்யும் போது ஏற்பட்ட தவறு காரணமாகவே அந்தப் பெண்ணின் வீட்டிற்கு விநியோகம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





