மும்பையில் அதிர்ச்சி சம்பவம்… 12 பேருக்கு விஷமாக மாறிய சிக்கன் ஷவர்மா!
மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் கோரகானின் கிழக்கு பகுதி சந்தோஷ் நகரில் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் சாப்பிட்ட சிக்கன் ஷவர்மாவினால் ஏற்பட்ட பாதிப்பால் அவர்கள் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சையளித்தனர். இந்த தகவல் அறிந்த பிரஹன்மும்பை முனிசிபல் அதிகாரிகள் அந்த கடையை ஆய்வு செய்தனர். இதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.
இது தொடர்பாக பிஎம்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சந்தோஷ் நகர் செயற்கைக்கோள் கோபுரம் அருகே இயங்கிய ஹோட்டலில் கடந்த இரண்டு நாட்களாக சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்துள்ளனர். அவர்கள் சாப்பிட்ட உணவில் விஷத்தன்மை கலந்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் இருந்து 9 பேர் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார். சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.