கனடாவில் அதிர்ச்சி சம்பவம்… இந்திய மாணவர் சுட்டு கொலை
 
																																		அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சிரங் அன்டில் (24). இவர் கனடாவில் வசித்து வருகிறார். கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. கல்வி பயின்று வருகிறார்.
இந்நிலையில், இவர் கனடாவின் வென்கவெர் நகரில் தங்கி கல்வி பயின்று வருகிறார். சிரங் அன்டில் நேற்று முன் தினம் வென்கவெர் நகரின் கிழக்கு 55வது அவன்யூ பகுதியில் தனது சொகுசு காரில் பயணித்தார்.
அப்பகுதியில் முக்கிய தெருவில் இரவு 11 மணியளவில் சிரங் அன்டில் காரில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. இதையடுத்து,அப்பகுதியை சேர்ந்தவர்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து வந்த பொலிஸார், சாலையோரம் நின்றுகொண்டிருந்த சொகுசு காரை பரிசோதித்தனர்.
அப்போது அந்த காரில் சிரங் அன்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து சிரங்கின் உடலை கைப்பற்றிய பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சிரங்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது யார்? அல்லது சிரங் துப்பாக்க்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டாரா? உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். கனடாவில் இந்திய மாணவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
        



 
                         
                            
