ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கான கவசம் – போலந்தின் நடவடிக்கையால் கோபத்தில் புட்டின்
போலந்தின் பால்டிக் கடற்கரையோரம் உள்ள ரெட்சிக்கோவோ (Redzikowo) என்ற நகரில் ரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பாலிஸ்ரிக் ஏவுகணைப் பாதுகாப்புத் தளம் (US ballistic missile defence base) கடந்த வாரம் திறந்துவைக்கப்பட்டிருக்கிறது.
ரஷ்ய ஏவுகணைகளில் இருந்து ஐரோப்பாவைப் பாதுகாப்பதற்கான கவசம் எனக் கருதப்படுகின்ற இந்தத் தளம், அணு ஆயுத மோதலுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்துள்ளது என்று மொஸ்கோ குற்றம் சுமத்தி உள்ளது.
அழிக்கப்படவேண்டிய பிரதான இலக்குகளின் பட்டியலில் அதனைச் சேர்த்துள்ளதாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
போலந்தில் உள்ள அமெரிக்கத் தளங்கள் தாக்கப்படலாம் என்ற அச்சம் இதனால் அதிகரித்துள்ளது.
இதேவேளை, வான் தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக உக்ரைன் தலைநகராகிய கீவில் அமைந்திருந்த அமெரிக்கத் தூதரகம் உட்பட சில மேற்கு நாட்டுத் தூதரகங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு வருகின்றன. இது அந்த நகர மக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கி இருக்கிறது.